வேலையை முடித்து விட்டு அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து அறையைத் திறந்தால் போதும்! ஏதோ அண்ணாமலை படத்திற்கு முதல் காட்சி டிக்கெட் வாங்கிக் காத்திருக்கும் ரசிகர் கூட்டம் போல ஒன்றையொன்று முண்டியடித்துக் கொண்டு என்னையும் தள்ளி விட்டு திபு திபுவென்று உள்ளே நுழைந்து கொள்கின்றன! இந்த தள்ளு முள்ளுவினால் கதவின் கைப்பிடியில் சிக்கி எனது இரண்டு சட்டைகள் வேறு கிழிந்து விட்டிருக்கின்றன! இதற்கு வீட்டில் போய் நான் என்ன விளக்கம் சொல்வது என்ற கவலை வேறு அவ்வப்போது என்னை
வாட்டிக் கொண்டிருக்கிறது!
அறையை வாடகைக்கு எடுத்தபோதே என் நண்பன் சொன்னான். இங்கே ஏதோ சரியாகப் படவில்லை! வேறு அறை கேட்டு வாங்கிக் கொள் என்று. நான்தான் அட! எதெற்கெல்லாம் யோசிப்பது என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.
ஒரு கேன் தண்ணீர் ரூ30 கொடுத்து வாங்கி வைத்தேன்! இரண்டே நாளில் கேன் காலியாகி விட்டிருக்கிறது! துடைத்துக் கவிழ்த்து விட்டுப் போய்விடுகின்றன அந்த ஆவிகள்! அறைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும்போது நைஸாய் வெளியேறி அறைக்கதவை வெளிப்புறமாகத் தாழ் போட்டுத் தொலைத்து விடுகின்ற்ன. நள்ளிரவில் எழுந்து அவசரமாய் சிறுநீர் கழிக்கச் செல்லும்போது கதவைத் திறக்க முடியாமல் நான் பட்ட அவஸ்தை அந்த ஆவிகளுக்கே வெளிச்சம்! அதிலும் குறிப்பாய் அந்த ஐந்தாவது ஆவி..! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பற்றிக் கொண்டு வருகிறது எனக்கு!
இரண்டு வாரத்திற்கு முன்னர்தான் 75 ரூபாய் விலையில் புதிய தலையணை ஒன்று வாங்கி வந்தேன்! நேற்று காலை எழுந்து பார்க்கும்போது அறை முழுவதும் இலவம் பஞ்சாய்ப் பறந்து கொண்டிருந்தது!
இரண்டு மாதங்களுக்கு முன்னால் இதே அறையில் காலியாய் இருந்த படுக்கைக்கு இன்னொருவரை கொண்டு வந்து விட்டார் மேன்சன் மேனேஜர். தனியா இருந்தா பிடிக்காதே என்று முணகிக் கொண்டே புது நபரை வரவேற்றேன்!
"நான் பழனி" என்றார்.
"நான் நாமக்கல்" என்றேன்.
"அது இல்லை! என் பேர் பழனி" என்றார்.
"ஓ! என் பெயர் சிபி" என்றேன்!
அறைக்குள் பையை வைத்துவிட்டு வெளியே சென்று வந்தவர் கைகளில் புதிய பிளாஸ்டிக் வாளி, குவளை, இத்யாதி இத்யாதி...!
இரவு உறங்கப் போகும் முன் சிறிது நேரம் பொதுவாய்ப் பேசிக் கொண்டிருந்தோம்!
"உங்களுக்கு ஆவி, பேய் பிசாசுகள் மேல் நம்பிக்கை இருக்கிறதா?" என்றேன்.
"ஹெஹெஹெ" என்று ஏகமாய்ச் சிரித்தார்.
அடுத்த நாள் காலை நான் விழிக்கும் போது மேன்சன் மேனேஜர் வந்தார். உங்க நண்பர் மேன்சனையே காலி செய்து விட்டுப் போய் விட்டார். இரவு முழுவதும் அப்படிச் சிரித்தீர்களாமே! இது போல் அறை வாசிகளைக் காலி செய்யும் முயற்சியை கைவிடுங்கள்! இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்! ஒன்று இருவருக்கான வாடகையையும் நீங்களே கொடுக்க வேண்டி இருக்கும்! அல்லது உங்களை மேன்சனை விட்டு காலி செய்ய வேண்டி இருக்கும்" என்று எச்சரித்து விட்டு சென்றார்.
அவருக்கென்ன தெரியும்! ஐந்து ஆவிகளும் விடிய விடிய என்னை கிச்சு கிச்சு மூட்டித் தொலைத்த கொடுமை! தினம்தோறும் இதே அக்கப்போறாக இருக்கிறது! இருக்கட்டும் ஒரு நாள் மேனேஜரை இங்கே படுக்க வைத்து விட்டு வேறு அறையில் சென்று தங்கி விட வேண்டும்! என்று காத்திருந்தேன்! அதே போல் ஒரு நாள் வேறு அறைக்குச் சென்றுவிட்டு காலையில் வந்தேன். மேனேஜரின் நிலை என்னவாக இருக்குமென்று பார்க்க மனசில் ஒரு இனம்புரியாத வக்கிர ஆசை! மேனேஜர் வழக்கம்போல உற்சாகமாக எழுந்து குளிக்கக் கிளம்பி இருந்தார்.
"போச்சு! ஒரே ஒரு நாள் இருந்துக்கட்டுமான்னு கேட்டான்! சரின்னு சொல்லித் தொலைச்சேன்! இன்னிக்கு என் போர்வையெல்லாம் கிழிஞ்சி கிடக்குது" ன்னு நான் இரவு தங்கியிருந்த அறைவாசி யாரிடமோ சத்தமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தது காதுகளில் விழுந்தது!
இது ஆவதற்கில்லை! ஏதாச்சும் செய்தே ஆக வேண்டும்! மைலாப்பூரில் ஒரு பூசாரி தாயத்து தருகிறார் என ரகசிய விசாரணையில் தெரியவந்தது! வாங்கி வந்து அறையெங்கும் கட்டி வைத்தேன்! இனி வருகின்றனவா பார்த்து விடுவோம் என்று! மாலையில் வந்து பூட்டைத் திறந்து கதவைத் திறக்க முயன்றேன்! உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு கெக்கேபிக்கேவென பேசிச் சிரித்துக் கொண்டிருந்தன!
"மேனேஜர்" என்று கத்தினேன்! தட தடவென ஓடி வந்தார். கூடவே இரண்டு பேர். வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்தனர். "இவனுக்கு இதே வேலையாப் போச்சு" என்று என் இரு புஜங்களில் அழுத்திப் பிடித்தனர். மேனேஜர் தன் கைகளில் திடீரென ஒரு ஊசியை எடுத்தார். "டேய் டேய்...! ஆவி இருக்குதுடா, ஆவி இருக்குதுடா.. ஐந்து ஆவிகள் கும்மாளம் போடுதடா" என்று கத்திக் கொண்டிருக்கையிலேயே எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் நறுக்கென்று ஊசியைச் செருகினார் மேனேஜர். எனக்கு அப்படியே கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. ஆயினும் ஒரு நிம்மதி. அப்பாடா இனி விழிக்கும் வரையில் இந்த ஐந்து ஆவிகளின் தொல்லை இருக்காது என்று!