இப்பதிவின் எண்ணமும் ஆக்கமும் என்னுடையது! தட்டச்சு மட்டுமே அவருடையது ! அலுவலகப் பணிகளுக்கிடையிலும் நான் சொல்லச் சொல்ல குறிப்பெடுத்துக் கொண்டு இப்பதிவினை எனக்காக தன் வலைப் பூவில் வெளியிட இசைந்த எனதருமை (எனதெருமை அல்ல) அண்ணன் நாமக்கல் சிபி அவர்களுக்கு நன்றி!
கடந்த ஒரு வருடமாக "பிரிவும் பிரிவின் நிமித்தமும்" என்ற துயரத்தின் வலிகளையே என் கவிதைகளில் வாசித்து துயரங்களை தத்தமது நெஞ்சங்களில் பாரங்களாய் ஏற்றிக்கொண்ட இதயங்களுக்கு எனது நன்றியினை இன்று தெரிவித்துக் கொள்கிறேன்!
இழந்து விட்ட ஒரு நட்பின் காயத்தால் துயரங்களை என் வரிகளில் விதைத்து வந்த நான், பதிவுலகில் கிடைத்த சொந்தங்களின் அன்பு மழையில் கொஞ்சம் திக்கு முக்காடிப் போயிருக்கிறேன்! என் பிறந்த நாள் அன்று (என்)வரலாறு காணாத அளவில் தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவும், பதிவுகளின் வாயிலாகவும் வந்த வாழ்த்துக்களின் எண்ணிக்கையில் மலைத்துப் போயிருக்கிறேன்!
இப்படிப்பட்ட நல்லிதயங்களின் மேலா நான் இத்தனை நாள் துயரங்களின் பாரங்களை ஏற்றி வைத்திருக்கிறேன்? தொலைக் காட்சித் தொடர்களை விடவும் அழுவாச்சி காவியங்களை நான் இங்கி அரங்கேற்றி இருக்கிறேன் என்று பலர் சொல்லியபோதும் நான் சிந்திக்காமல் இருந்து விட்டேன் என்பதை இன்றெண்ணிப் பார்த்து வருந்தி இருந்தபோதுதான் அண்ணன் சிபி அவர்களின் அன்பான ஆலோசனை கிடைத்தது!
"துயரங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கலாம்! ஆனால் துயரங்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல! வாழ்வின் ஒவ்வோர் பக்கத்திற்கும் சென்று பார்த்து வாழ வேண்டும்! பிரிவுகளின் துயரமே நிரந்தரமாகிவிடலாகாது!
புதுப் புது உறவுகளின் வரவுகளே வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக்கும்!
பழையன மறத்தலும் புதியன நினைத்தலும் வாழ்வை களிப்புடையதாக்கும்!" என்ற அவரது அன்பான ஆலோசனையால் சில கணங்கள் சிந்தித்து
இனி துயரங்களின் சுவடுகள் நிறைந்த பாலைத் திணையை - கும்மிகளின் எல்லை தொடும் "கும்மித் திணை" யாக்கி வாசிப்பவர்களின் மனதை, எண்ணத்தை இலேசாக்கி வாய்விட்டுச் சிரித்துச் செல்லும்படியாக கும்மிப் பதிவுகள் மட்டுமே இடுவது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோர் தீர்மானத்தை இந்த இனியதொரு நாளில் எடுத்திருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்!
இனி "பாலைத் திணை" - "பிரிவும் பிரிவின் நிமித்தமும்" என்பதை அழித்து விட்டு "கும்மித் திணை" - கும்மியும் கும்மி நிமித்தமும் என்றே எழுதவிருக்கிறேன்!
இனி எனது வலைப் பூ பாலை நிலம் அல்ல!
அது ஒரு நகைச்சுவைச் சோலைவனம்!
கும்மித் திணை,
காயத்ரி!
